DVA PETITION CAN BE AMENDED. A PETITION under Domestic violence Act can be amended…
குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் புகார், நீதிமன்ற கோப்பிற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு பிறகு, அந்த புகாரில் திருத்தம் செய்ய அனுமதி அளிக்கும்படி பாதிக்கப்பட்ட பெண் கோர முடியுமா?
இந்த வழக்கில் கண்ட மனுதாரரான சுவர்ணகுமாரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சில பரிகாரங்களை கோரி குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் மனுதாக்கல் செய்தார். பின்னர் அந்த வழக்கில் கூடுதலாக சில பரிகாரத்தை சேர்க்க வேண்டும் என்று கூறி உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 6 விதி 17 ன் கீழ் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவிற்கு எதிர்மனுதார்கள், எதிருரை தாக்கல் செய்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் 18,19,20,21 மற்றும் 22 ஆகியவற்றின் கீழான பரிகாரங்களை வழங்குவதற்கான ஓர் உரிமையியல் நீதிமன்றம், குடும்ப நீதிமன்றம் அல்லது குற்றவியல் நீதிமன்றங்களுக்கு பிரிவு 26 அதிகாரம் வழங்கியுள்ளது. எனவே உரிமையியல் நடைமுறைச் சட்டமும், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழான மனுக்களுக்கு பொருந்தும் என்று கூறி சுவர்ணகுமாரியின் மனுவை அனுமதித்து புகாரில் திருத்தம் செய்ய அனுமதி வழங்கினார். அந்த உத்தரவை எதிர்த்து எதிர்மனுதார்கள் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.
அதனை விசாரித்த முதலாம் மேல்முறையீட்டு நீதிமன்றம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் புகாரில் திருத்தம் செய்ய எந்தவொரு சட்டப் பிரிவுகளும் இல்லை என்று கூறி எதிர்மனுதார்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அனுமதித்தது.
அதனை எதிர்த்து சுவர்ணகுமாரி உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். அந்த சீராய்வு மனுவை உயர்நீதிமன்றம் அனுமதித்து உத்தரவு பிறப்பித்தது.
அந்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எதிர்மனுதார்கள் உச்சநீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.
வழக்கை நீதிபதி திரு, A. K. சிக்ரி மற்றும் R. K அகர்வால் விசாரித்தனர்.
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கமே பாதிக்கப்பட்ட நபருக்குள்ள உரிமையியல் உரிமைகளுக்கான நிவாரணங்களையும் பெற்றுத் தர வேண்டும் என்பதற்காகத்தான். குடும்பத்தில் ஏற்படும் பெண்களுக்கு எதிரான வன்முறையில் இருந்து அவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் அந்த சட்டத்தின் நோக்கமாகும். ஆனால் உரிமையியல் சட்டத்தில் அதற்கான வழிமுறைகள் இல்லை.
அந்த வன்முறைச் செயலை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498(A) குற்றமாக குறிப்பிடுகிறது. குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிமையியல் சட்டத்தின் மூலமாகவும் நிவாரணம் அளிப்பதற்காக குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் தான் இந்த சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் புகாரில் முதலில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் உரிமையியல் தன்மை கொண்டவைகளாக அமைந்துள்ளது. நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் மீறப்படும் பொழுது, அந்த உத்தரவுகள் குற்றவியல் தன்மை கொண்டவைகளாக மாறி விடுகிறது.
இந்த சட்டத்தில் அத்தியாயம் 4 ல் கூறப்பட்டுள்ள நிவாரணங்களை பெறுவதற்காக பிரிவுகள் 12 முதல் 23 வரை அந்த சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் அல்லது பாதுகாப்பு அலுவலர் அல்லது பாதிக்கப்பட்ட நபரின் சார்பாக வேறு எந்தவொரு நபரும் ஒரு மனுவை குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 12 ன் கீழ் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்.
பிரிவு 18 ன் கீழ் ஒரு பாதுகாப்பு உத்தரவை குற்றவியல் நடுவர் பிறப்பிக்கலாம்.
பிரிவு 19 ன் கீழ் வசிப்பதற்கான இடத்திற்கு ஒரு உத்தரவையும், பங்கீடு செய்து கொள்ளப்பட்ட வீட்டிலிருந்து எதிர்மனுதார் தாமே வெளியேற வேண்டும் என்ற உத்தரவையும், வேறு எந்த உறவினர்களும் பாதிக்கப்பட்ட நபர் வசித்து வருவதற்கு இடைஞ்சல் செய்யக்கூடாது என்று உத்தரவையும் குற்றவியல் நடுவர் பிறப்பிக்கலாம்.
பிரிவு 20 ன் கீழ் பண உதவிகள் குறித்த உத்தரவையும், வருமான இழப்பு, மருத்துவ செலவுகள், ஜீவனாம்சம் போன்ற உத்தரவையும் பிறப்பிக்கலாம்.
பாதுகாவல் ஆணைகளை (Custody Orders) இச்சட்டத்தின் பிரிவு 21 ன் கீழ் குற்றவியல் நடுவர் பிறப்பிக்கலாம்.
பிரிவு 22 ன் கீழ் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட மன உளைச்சல், சித்ரவதை, காயங்களுக்கு இழப்பீடு வழங்குமாறும் உத்தரவு பிறப்பிக்கலாம்.
பிரிவு 23 ன் கீழ் இடைக்கால உத்தரவுகளை பிறப்பிக்க குற்றவியல் நடுவருக்கு அதிகாரம் உள்ளது.
எனவே பாதிக்கப்பட்ட நபரால் பெறக்கூடிய பல்வேறு நிவாரணங்களும் உரிமையியல் தன்மை கொண்ட உத்தரவாகத்தான் உள்ளது. அதே நேரம் குற்றவியல் நடுவரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் மீறப்படும் பொழுது அவை பிரிவு 31 ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக மாறுகிறது.
குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் புகார்கள், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளின்படி குற்றவியல் வழக்குகள் நடத்தப்பட வேண்டும் என்றாலும் கூட, உரிய வழக்குகளில் புகாரில் திருத்தம் மேற்கொள்வற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கலாம். பல வழக்கு நடவடிக்கைகள் உருவாவதை தடுக்கும் வகையில் புகாரில் திருத்தம் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கலாம்.
குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 28(2) ல் கூறப்பட்டுள்ள படி, புகார்கள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு தான் நடத்தப்பட வேண்டும் என்றாலும், பிரிவு 12 அல்லது 23(2) ன் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்களை தீர்மானிப்பதற்கு ஒரு நடைமுறையை நீதிமன்றமே ஏற்படுத்தி கொள்ளலாம் என பிரிவு 28(2) ல் கூடுதலாக கூறப்பட்டுள்ளது.
ஒரு குற்றவியல் நடுவரால் பிறப்பிக்கப்படும் இடைக்கால உத்தரவுகள் அல்லது இறுதி உத்தரவுகள் ஏற கூறப்பட்டுள்ளது போல் உரிமையியல் தன்மை கொண்ட உத்தரவுகள் ஆகும். புகாரில் திருத்தம் செய்ய அதிகாரம் வழங்கப்படவில்லை என்றால், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கமே சிதைந்துவிடும்.
எனவே குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் புகாரில் திருத்தம் செய்ய குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. A. NO – 516/2016
dt – 18.4.2016
குன்னப்பரெட்டி (எ) நூக்கலா சங்க பாலாஜி Vs குன்னப்பரெட்டி சுவர்ணகுமாரி மற்றும் பலர்
2016-4-CTC-314
2016-AIR-SC-2519







