• slider1
  • slider2_new
  • slider3-new

Status of women in the State of Tamil Nadu In the Republic of India

குடும்ப வன்முறை குறித்துக் கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் பதிவான மொத்த புகார்களின் எண்ணிக்கையில், நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது. நாடு முழுவதும் பதிவான 4,547 புகார்களில், பெரியார் பிறந்த மண்ணாகிய தமிழகத்தில் பதிவாகியுள்ள புகார்களின் எண்ணிக்கை 3,838. அதாவது, நாட்டில் பதிவாகியுள்ள மொத்தப் புகார்களில் 80 சதவீதத்துக்கும் மேலானவை தமிழகத்தில்தான் பதிவாகியுள்ளன. கடந்த ஆகஸ்டு 6-ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியின் போது உள்துறை அமைச்சகம் அளித்த தகவல் இது. மற்ற மாநிலங்களில் புகார்கள் பதிவு செயப்படவில்லையே தவிர, குற்றங்கள் நடக்கவில்லை என்று பொருளல்ல. ஜார்கண்டு, கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களின் தகவல்தான் உள்ளதாகவும், இதர மாநிலங்கள் பற்றித் தகவல் கிடைக்கவில்லை என்றும் உள்துறை அமைச்சகம் கூறுகிறது.

 

பெண்கள் மீதான வன்முறை குறித்து இவ்வளவு புகார்கள் பதிவாகியுள்ள போதிலும், இக்கொடுமைகளுக்கு எதிராகத் தமிழகம் கொதித்தெழுந்து போராடாமல் இன்னமும் அமைதியாகவே இருக்கிறது. வட மாநிலங்களில் இத்தகைய குற்றங்களுக்கு எதிராகச் சாமானிய மக்கள் கிளர்ந்தெழுந்து போராடியுள்ள நிலையில், மிக அதிகமான குற்றங்கள் நடந்துள்ள தமிழகமோ சொரணையற்றுக் கிடக்கிறது.

பெண்ணைப் போகப் பொருளாகப் பார்க்கும் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கச் சமூகம், பெண்கள் மீதான வன்முறைகளை ஒரு குற்றமாகவே கருதுவதில்லை. மறுபுறம், மறுகாலனியாதிக்கக் கொள்கைகளின் கீழ் திணிக்கப்படும் முதலாளித்துவமோ, இத்தகைய நிலப்பிரபுத்துவத்துடன் இணைந்த வீரிய ஒட்டுரகச் சீரழிவுப் பண்பாட்டை உருவாக்கி வளர்த்து வருகிறது. நுகர்வியமும், நகரமயமாக்கமும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தனிநபர்வாத வெறித்தனத்தை வளர்த்து விட்டிருக்கிறது.

பெண்கள் மீதான வன்முறைகளைக் கொடிய குற்றமாகச் சித்தரித்து அதற்கெதிராகப் போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தாமல், பரபரப்பூட்டும் வகையிலும் பாலியல் வக்கிரத்தைத் தூண்டும் வகையிலும்தான் இத்தகைய செய்திகள் வெளியிடப்படுகின்றன. பண்பாட்டில் ஒழுக்கமில்லாத நிலை என்பது திட்டமிட்டே உருவாக்கப்பட்டு ஊடகங்களால் பரப்பப்படுகிறது.

இதனால் அநீதி இழைப்பதும், அதைக் கண்டும் காணாமல் இருப்பதும், சகித்துக் கொள்வதும் சகஜமானதாகி வருகிறது. சன் டி.வி அகிலாவுக்கு என்ன நேர்ந்ததோ, அதுவே இன்று எல்லா பெண்களுக்கும் தங்களது பணியிடங்களில் தவிர்க்கவியலாத தொல்லையாக நிலவுகிறது. தமிழகத்தின் கிராமப்புறங்களில் பெண்கள் மீதான தாக்குதல்களுக்கும் சீண்டல்களுக்கும் பஞ்சாயத்துக் கூட்டி அபராதம் விதிப்பதைப் போலத்தான், நகர்ப்புறங்களில் இழப்பீடும் மன்னிப்புக் கேட்பதும் கௌரவமான முறையில் நடத்தப்படுகின்றன.

பெண்கள் மீதான வன்முறை குறித்த பிரச்சினையில் அதீத அக்கறை கொண்டுள்ளதைப் போல ஜெயலலிதா அரசு காட்டிக் கொள்கிறது. ஆனால், குடும்ப வன்முறைக்கு எதிராகத் தமிழக பெண்கள் துணிவுடன் புகார் கொடுக்க முன்வந்துள்ள போதிலும், குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகியுள்ள 3,838 புகார்களில், போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ள புகார்களின் எண்ணிக்கை வெறும் 9 மட்டும்தான். இந்த 9 வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் வெறும் 11 பேர்தான். குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் போலீசிடம் புகார் கொடுத்தாலும், குற்றவாளிகளான கணவன் மற்றும் அவரது உறவினர்களுக்கு தண்டனையைப் பெற்றுத் தருவதில் அதிகார வர்க்கமும் போலீசும் ஆணாதிக்க மமதையுடன் அலட்சியப்படுத்துவதையே இது நிரூபித்துக் காட்டுகிறது.

மிகவும் பின்தங்கிய மாநிலமான ஜார்கண்டில் கடந்த ஆண்டில் பதிவான குடும்ப வன்முறை புகார்களின் எண்ணிக்கை 552. இதில் 108 பேர் தண்டனை பெற்றுள்ளனர். ஆனால், ஜார்கண்டு மாநிலத்தைவிட எண்ணிக்கையிலும் ஆற்றலிலும் அதிகமாக – 1296 போலீசு நிலையங்களுடன், ஏறத்தாழ 250 ஐ.பி.எஸ். அதிகாரிகளும் ஒரு லட்சம் போலீசாரும் கொண்டுள்ள தமிழகத்தில், புகார்கள் மீதான நடவடிக்கை என்பது மிகமிக அற்பமானதாக இருக்கிறது. இதை மூடி மறைத்து, புகார்களை விசாரிக்க கூடுதலாக போலீசார் இல்லாததாலேயே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது என்று தமிழக போலீசு புளுகுகிறது. இத்தகைய போலீசிடம்தான் பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுப்பதற்கான அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டில் 584 பாலியல் வல்லுறவுக் கொடூரங்கள், 721 பாலியல் சீண்டல்கள், 1379 கடத்தல்கள், 656 பாலியல் தொல்லைப்படுத்தல் வழக்குகளைப் போலீசு பதிவு செய்துள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களாகப் பதிவு செயப்பட்ட 5,861 வழக்குகள் இன்னமும் குற்றப் பத்திரிகை தாக்கல் செயப்படாமலேயே உள்ளன. தமிழகத்தில் பல்வேறு நீதிமன்றங்களில் 1,751 பாலியல் வல்லுறவுக் குற்ற வழக்குகள் உள்ளிட்டுப் பெண்களுக்கு எதிரான 14,545 குற்ற வழக்குகள் இன்னமும் விசாரிக்கப்படாமல், பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கின்றன.

 

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்முறை வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும், இத்தகைய வழக்குகளை மாவட்ட போலீசு கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்து 15 நாட்களுக்கு ஒருமுறை சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீசு இயக்குநருக்கு அறிக்கை அனுப்பவும், இத்தகைய வழக்குகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட 13 அம்சத் திட்டத்தை கடந்த ஜனவரியில் பரபரப்பாக அறிவித்தார் ஜெயலலிதா. ஆனால், இத்தகைய அறிவிப்பு வெற்றுச் சவடால் என்பதையே மேற்கூறிய புள்ளிவிவர ஆதாரங்கள் நிரூபித்துக் காட்டுகின்றன.

இது மட்டுமின்றி, கடந்த ஜனவரி 2009 முதல் ஆகஸ்டு 2013 வரையிலான காலத்தில், தமிழகத்தின் 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட பெண்கள் தாக்கப்பட்ட சம்பவங்களில் 124-ஐ மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படாததையும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காததையும், தமது கள ஆய்வின் மூலம் அண்மையில் அம்பலப்படுத்தியுள்ளார், எவிடென்ஸ் என்ற தன்னார்வக் குழுவின் திட்ட இயக்குநரான திலகம்.

Be Sociable, Share!Tweet about this on Twitter
Twitter
Share on Facebook
Facebook
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright ©2015 VPS LAW FIRM. All Rights Reserved. Disclaimer  Term of Use